
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ஆம் தேதி (25.11.2024) தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், வக்பு சட்டத் திருத்தம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் எதிர்க்கட்சிகள் சார்பில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியுள்ளன.
இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையொட்டி ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்டுள்ள கடுமையான மற்றும் வரலாறு காணாத சேதங்களைக் கருத்தில்கொண்டு, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தைத் தற்காலிகமாகச் சீரமைக்க 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியினை விடுவித்திடக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மக்களவையை ஒத்திவைக்கக் கோரி கனிமொழி எம்.பி. நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், “நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்த இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும். இந்த நிவாரண நிதியை உடனடியாக வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழுவை அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஃ பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட தமிழக நிலவரம் குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதே போன்று தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யக்கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.