என்கவுண்டரில் கொல்லப்பட்ட ரவுடி சங்கரின் உடலை மறுபிரேதப் பரிசோதனை செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க, காவல்துறைக்கு செப்டம்பர் 8 -ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடி சங்கர், கடந்த 21 -ஆம் தேதி என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சி.பி.சி.ஐ.டி அல்லது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரியும், உடலை மறு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரியும், அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பிரேதப் பரிசோதனை தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு, தற்போது துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதுவரை 6 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.
மாஜிஸ்திரேட் அறிக்கை வராததால், விசாரணையை செப்டம்பர் 8 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, காவல்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.