
நேற்று நடைபெற்ற தவெகவின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியிருந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உரையில், 'மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே... மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அவர்களே... ஒன்றியத்தில் பாஜக ஆட்சி ஒரு பாசிச ஆட்சி என அழைக்கப்படுது. இங்கு நீங்கள் பண்ற ஆட்சி மட்டும் என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத அது பாசிச ஆட்சிதானே.தினம் தினம் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கு முடிவு கட்டப் போகிறார்கள். வரும் தேர்தலில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி' எனப் பேசியிருந்தார்.

திமுகவினர் விஜய்யின் பேச்சுக்கு பதில் பதிலடி கொடுத்து வரும் நிலையில் அடுத்த தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என்ற கருத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்திக்கையில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். ''இப்படித்தான் பலர், எல்லா கட்சித் தலைவர்களும் கட்சி வளருவதற்காக தொண்டனை குஷிப்படுத்துவதற்கு, உற்சாகப்படுத்துவதற்கு அப்படி கருத்து சொல்வார்கள். இங்கு எல்லா கட்சித் தலைவர்களும் அப்படித்தான். நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதற்கான வாய்ப்பையும் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஏன் விஜய் அப்படி சொன்னார் என்ற கேள்வியை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்'' என்றார்.
செங்கோட்டையன் டெல்லிக்கு சென்றது பற்றிய கேள்விக்கு, 'அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது' எனவும் தெரிவித்துள்ளார்.