
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், கூட்டணி கட்சியாக பவன் கல்யாணின் ஜன சேனாவும், பா.ஜ.கவும் இடம் பெற்றிருக்கிறது. இம்மாநிலத்தில் துணை முதல்வராக பவன் கல்யாண் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில், நந்தியால் மாவட்டத்தின் நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள காசிநயனா ஷேத்ரா என்ற இந்து கோயில், வனத்துறை விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாகக் கூறி சமீபத்தில் அந்த கோயில் தரைமட்டமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், மாநிலத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வரும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரின் உத்தரவின் பெயரில் காசிநயனா ஷேத்ரா இடிக்கப்பட்டுள்ளது. இந்த இடிப்பு நடவடிக்கை என்பது இந்து மதத்தின் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல். எங்களது ஆட்சி காலத்தில், கோயில் நிலங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்தோம். ஆனால், இந்த ஆட்சி வந்த சில மாதங்களுக்குள் அவர்களின் கண்காணிப்பிலே ஒரு புனிதமான கோயில் இடிக்கப்பட்டது. இந்து தர்மத்தை பாதுகாப்பது இப்படிதானா என்பது குறித்து அவர்கள் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். திருப்பதி லட்டு விவகாரம், சமீபத்திய மத நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்கள் ஆகிய விவகாரங்களில் இந்த அரசு தோல்வியடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.