
மதுரை திருமங்கலம் நகராட்சி பகுதியில் சாலையில் நடந்து சென்ற சிறுவனை தெருநாய் ஒன்று கடித்துக் குதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையாகவே தமிழகத்தில் பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பொதுமக்களை கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வைரலாகி வருகிறது. தமிழகம் முழுவதும் தெருநாய் கடியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'தெருநாய் கடி' விவகாரம் தொடர்பான புகார் சட்டப்பேரவை வரை கவன ஈர்ப்பு தீர்மானமாக சென்று விவாதங்கள் நடைபெற்றது.
இந்நிலையில் மதுரை திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட கொடிமரம் தெரு பகுதியில் சிறுவன் ஒருவன் விளையாடுவதற்காக நடந்து சென்ற பொழுது வெளியில் நடமாடிக் கொண்டிருந்த தெரு நாய் ஒன்று திடீரென சிறுவனை கடித்துக் குதறியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் நாயை விரட்டியதால் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.