
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்று போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் ஆரம்பத்தில் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதனை நம்பிய நான், அவரது வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் அவரது சகோதரரும், தாயும் ஒரு அறைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்த அறையை மூடிவிட்டு, அந்த நபர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். ஆனால், அவர் என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், போபால் போலீசார் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதே போல், அவரது தாயார் பாலியல் வன்கொடுமைக்கு தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பிரமோத் அகர்வால் மற்றும் பிரசாந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்த போது, பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்த நபரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. மேலும், தாயின் தூண்டுதலில் நடந்த இந்த குற்றத்தில், அவரையும் குற்றவாளி என்று அறிவித்தது. இது குறித்து நீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘பாலியல் வன்கொடுமை வழக்கில் முதன்மை குற்றவாளியாக இல்லாவிட்டாலும், பாலியல் வன்கொடுமைக்கு தூண்டியதாக ஒரு பெண் குற்றவாளியாகக் கருதப்படலாம்’ எனத் தெரிவித்தது.