சென்னை கடற்கரை சாலையில் ஜோடியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணத்தை பறிப்பதாக காதல் ஜோடிகள் தெரிவிக்கின்றனர். சிலர் இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கின்றனர். ஒரு சில காதல் ஜோடிகள், ச்சே... நிம்மதியா பீச்சுக்குக் கூட போக முடியல, இனி பீச்சுக்கு போக வேணாம், போனிலேயே பேசிக்கலாமுன்னு வருத்தப்படுகிறார்கள்.
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரை சாலையில்தான் இந்த வழிப்பறி சம்பவங்கள் நடக்கிறது. ஜோடியாக வருபவர்களை ஒரு கும்பல் நோட்டமிடுகிறது. அவர்கள் விலை உயர்ந்த பைக்குகள் அல்லது காரில் வருகிறார்களா என்பதை கண்காணிக்கிறார்கள். பின்னர் அவர்களை பின்தொடர்ந்து, நெருங்கி கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு சம்பவம் நடப்பதாக நீலாங்கரை போலீசாருக்கு புகார்கள் வந்தன.
புகார் குறித்து அடையாறு போலீஸ் துணை கமிஷனர் ஷேசாங்சாய், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் உத்தரவின்பேரில் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசலு, இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மாறுவேடத்தில் சென்று கண்காணிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.
அதன்படி கடற்கரை பகுதியில் மாறுவேடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெட்டுவாங்கேணி கடற்கரை பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வெட்டுவாங்கேணியை சேர்ந்த சிவா (வயது 26), ராயபுரத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (26) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் இருவரும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரைக்கு ஜோடியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7½ பவுன் தங்க நகைகளும், ஒரு மோட்டார்சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரிடமும் நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.