Skip to main content

எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? -பொன்.மாணிக்கவேல் தரப்பு அறிக்கை தர உத்தரவு!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின் எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி, பொன். மாணிக்கவேல் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலைக் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்,  தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

 In how many cases has the indictment been filed? - pon.manikkavel Request to Submit Report!


இவ்வழக்கு  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,  ‘சிலைக்கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தில்தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அறிக்கைகளை சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் தலைவராக உள்ள கூடுதல் டிஜிபியிடம் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பொன். மாணிக்கவேல் பின்பற்றவில்லை.  பொன்.மாணிக்கவேல் தனது விசாரணை தொடர்பான எந்த விவரங்களையும் கூடுதல் டிஜிபி-யிடம் தாக்கல் செய்யவில்லை.  அரசுடன் ஒத்துழைக்க மறுக்கிறார்.  சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் காவல்துறை டி.ஜி.பி.  நடத்தும் கூட்டங்கள் எதிலும் பொன். மாணிக்கவேல் கலந்து கொள்வதில்லை.   குழுவில் உள்ள மற்ற அதிகாரிகளையும் கூட்டங்களில் பங்கேற்கவிடாமல்  தடுத்தார். உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றி பொன். மாணிக்கவேலுக்கு உரிய ஒத்துழைப்பை தமிழக அரசு வழங்கி வரும் நிலையில், தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை.  பொன் மாணிக்கவேல் கூறும் குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து அரசிடம் கேள்வியெழுப்பும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யாத பொன்மாணிக்கவேலிடம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.  பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தமிழக அரசு கடந்த இரண்டாண்டுகளில 31 கோடியே 96 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ள போதிலும், பொன் மாணிக்கவேல் இதுவரை ஒரு வழக்கில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.’ என குற்றம்சாட்டினார்.

 

 In how many cases has the indictment been filed? - pon.manikkavel Request to Submit Report!

 

தொடர்ந்து நீதிபதிகள்,   ‘சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட பிறகு எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற விபரத்தை அடிப்படையாக வைத்தே இந்த வழக்கை முடிவு செய்ய முடியும்’ எனத் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த பொன் மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் செல்வராஜ்,  ‘கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பொன் மணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், 6 மாதத்திற்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தால் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. பணி செய்யவிடாமல் அரசு தடுத்த நேரத்தில் சில விளக்கம் கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது சிலைக் கடத்தல் வழக்கு  சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டது.‘ என எடுத்துரைத்தார்.  

இதனைத் தொடர்ந்து,   ‘பொன். மாணிக்கவேலுக்கு செய்து கொடுத்த வசதிகள் குறித்து தமிழக அரசும், இதுவரை விசாரித்த வழக்கு விபரங்கள் குறித்து பொன் மாணிக்கவேல் தரப்பும் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 25 -ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்