Skip to main content

தீ வைத்த காதலன்; சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 29/03/2025 | Edited on 29/03/2025
 Boyfriend sets fire to girl; girl undergoing treatment lose their live tragically

எட்டயபுரத்தில் முன்னாள் காதலனால் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  எட்டயபுரம் அருகே இளம் புவனத்தைக் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள் (45). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.  கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை விட்டு பிரிந்து தனது மகன், மகளுடன் பரமக்குடியில் வாழ்ந்து வருகிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் பரமக்குடி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் காளியம்மாளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக பரமக்குடி காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி புகாரை முடித்து வைத்துள்ளனர்.

இருப்பினும், தொடர்ந்து சந்தோஷினால் பிரச்சனை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23ம் தேதி மதியம் அந்த வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டுள்ளது. அதனால் வீட்டிற்குள் ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமி உடல் முழுவதும் தீ காயங்களுடன் உயிருக்கும் போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுமியை  மீட்டு  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. விசாரணையில் இரண்டு இளைஞர்கள் சம்பவ நாளில் அந்த வீட்டுக்கு வந்து சென்றது  தெரிய வந்தது. இதனிடையே தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் கொடுத்த  வாக்குமூலத்தில் காதலன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா இருவரும் வந்து தன்னிடம் பேச வேண்டும் என்று மிரட்டி தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டுத் தப்பி ஓடிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாக்கு மூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் (21) மற்றும் அவரது நண்பர் முத்தையா(22) ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்