Skip to main content

ரவுடி நாகேந்திரன் கைது; பால் கனகராஜிடம் விசாரணை நிறைவு

Published on 09/08/2024 | Edited on 09/08/2024
 Rowdy Nagendran arrested; Investigation of Pal Kanagaraj completed

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52) கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) மாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யச் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பாஜக பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல்துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் கட்சியின், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த கொலை சம்பவத்தில் மற்றொரு முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ரவுடிகள் நாகேந்திரன் மற்றும் சம்போ செந்தில் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 Rowdy Nagendran arrested; Investigation of Pal Kanagaraj completed


இந்நிலையில் நாகேந்திரன் மற்றும் சம்போ செந்தில் ஆகிய இருவருக்கும் வழக்கறிஞராக செயல்பட்டதற்காக பாஜகவை சேர்ந்த பால் கனகராஜூக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். எழும்பூரில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் காலை 11 மணிக்கு ஆஜராகினார். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை  மாலை 5 மணியை கடந்து ஆறு மணி நேரத்திற்கு மேலாக  நடைபெற்றது. போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்ட நிலையில் பால் கனகராஜிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே ரவுடி நாகேந்திரன் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக செம்பியன் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்