Skip to main content

’திருநங்கைகள் இனி பாலியல் தொழிலில் ஈடுபடாமல், பிச்சை எடுக்க முடியாத வகையில் மசோதா அமையவுள்ளது’ - ரோஸ்

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தின் மாநிலத் தலைவரும் சமூக சேவகியுமான திருநங்கை பபிதா ரோஸ் தனது பிறந்தநாளை ஆதரவற்ற முதியோர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

 

r

 

அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்,    திருநங்கைகள் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்று பல்வேறு புகார்கள் வருகிறது.  இதற்கு ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது சரியான முறையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலமாவது அவர்கள் மற்றவர்களைப் போல் சமூகத்தில் மாற்று வேலைகளை செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். அதேபோல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி திருநங்கைகள் சாலையோரம் நின்று கொண்டு இரவு நேரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார் இதனை நான் வரவேற்கிறேன்.

 

r

 

மேலும் அண்ணாமலை நகரில் திருநங்கைகள் இரவு நேரங்களில் ரயிலில் இறங்கி வரும் பயணிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு செல்போன்களை பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. அதனை காவல் துறையினர் கண்காணித்து அவர்கள் அந்த பக்கம் செல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பிரதமர் மோடி திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்காக மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளார். அதன்பிறகு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட முடியாது, கடைகளுக்குச் சென்று பிச்சை எடுக்க முடியாத வகையில் அந்த மசோதா அமையவுள்ளது. மேலும் அவர்கள் மற்றவர்களைப் போல் அனைத்து வேலைகளையும் செய்து வாழ்க்கையில் உயர அதில் வழிவகை செய்துள்ளது. இதனை நாங்கள் அனைவரும் வரவேற்கிறோம்.

 

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருநங்கைகளை மருத்துவம், காவல்துறை, நீதித்துறை உள்ளிட்ட துறைகளில் பணி அமர்த்தியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திருநங்கைகள் சுய தொழில் செய்து முன்னேற அவர் உதவி செய்ய வேண்டும்.  திருநங்கை போர்வையில் சில ஆண்களும் மேக்கப் போட்டுக்கொண்டு இரவு நேரங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.,  இதனால் திருநங்கைகள் சமூகத்திற்கு இது கூடுதல் அவமானத்தை ஏற்படுத்துகிறது.  அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு என்று ஒன்று உள்ளது.  அதில் திருநங்கைகளுக்கு எவ்வாறு உதவி செய்கிறார்கள் என்றும் அவர்களின் பணிகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். திருநங்கைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட அளவில் நடத்த அரசு முன்வர வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்