Skip to main content

புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து!

Published on 07/10/2024 | Edited on 07/10/2024
 roof of the newly built primary health center collapsed and fell

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டுக் கடந்த மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த சுகாதார நிலையத்துக்கு அருகில் உள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் 250 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு 24 மணி நேரமும் மகப்பேறு மருத்துவம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் காலை மருத்துவமனை செயல்படத் தொடங்கின. அப்போது பிரசவ வார்டில்  இருந்த மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பிரசவ வார்டில் நோயாளிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அதேநேரத்தில் உள்ளிருந்த பொருட்கள் சேதமடைந்தன. கட்டிடம் கட்டி தந்து சிலமாதங்களே ஆன நிலையில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது என்று பொதுமக்களும் நோயாளிகளும் குற்றம் சாட்டுகின்றனர்.  புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 roof of the newly built primary health center collapsed and fell

கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூரில் இலங்கை ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம்மில் கட்டப்பட்ட வீடுகளில் ஒன்றின் மேற்பூச்சு பெயர்த்து விழுந்தது. தரமற்ற முறையில் வீடுகள் கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த அதிகாரிகள், வீட்டுக்குச் சென்ற அதன் பயனாளிகள் உள் அலங்காரம் செய்த பணிகளால் மேற்பூச்சு பெயர்த்து விழுந்தது என அறிக்கை வெளியிட்டனர்.

இப்போது வேலூர் மாவட்டத்தில் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்