Skip to main content

16 லாரிகளுடன் நெல்லை வந்த கேரள குழுவினர்

Published on 22/12/2024 | Edited on 22/12/2024
 Medical waste issue; The Kerala team came to Nella with 16 trucks

கேரளாவிலிருந்து தமிழக எல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக பல ஆண்டுகளாகவே புகார்கள் எழுந்து வருகிறது. சில சமயங்களில் தமிழக எல்லையோரம் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகளை தமிழக பகுதியைச் சேர்ந்தவர்கள் கையும் களவுமாக பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது.

தொடர் கதையாகி வரும் இந்த சம்பவங்கள் குறித்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சில நாட்களாகவே தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். திருநெல்வேலி மாவட்டம் புறநகர்ப் பகுதியாக இருக்கக்கூடிய கொண்டாநகரம், சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நடுக்கல் பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் டன் கணக்கில் கட்டப்பட்டு வருவது தொடர்பாக சுத்தமல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் சுத்தமல்லி பகுதியைச்  சேர்ந்த மனோகரன் மற்றும் மாயாண்டி ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவக் கழிவுகளை தமிழக எல்லையில் கொட்டுவதற்கு முக்கிய தலைமை ஏஜெண்டாக இவர்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

 Medical waste issue; The Kerala team came to Nella with 16 trucks

கடந்த 20 ஆம் தேதி நெல்லையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அதிகாரி முகமது சர்க்காரியா தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ''பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை அகற்றுவது குறித்து கேரளா அரசு நடவடிக்கை எடுக்கும். நெல்லையில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளில் சோதனைக்கு பயன்படுத்தும் மாதிரிகளை அதிகம் உள்ளன. எனவே இந்த மருத்துவக் கழிவுகள் அபாயகரமானது இல்லை. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சுகாதாரத்துறை ஆய்வு குறித்து அறிக்கையை கேரள அரசிடம் அளிப்போம். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி கழிவுகளை அகற்றுவது பற்றி கேரள அரசு நடவடிக்கை எடுக்கும்'' என தெரிவித்திருந்தனர். 
 

nellai

நெல்லைப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அந்த குழு மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்காக நெல்லை வந்துள்ளது. இதற்காக 70 பேர் கொண்ட ஆறு குழுவினர் 16 லாரிகளில் வந்துள்ளனர். மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான இந்த குழு நல்லூரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் குழுமியிருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து பிரிந்து மருத்துவக் கழிவுகளை அகற்ற உள்ளனர். தமிழக அதிகாரிகளும், தமிழக காவல்துறை அதிகாரிகளும் அந்த குழுவுக்கு வழிகாட்டுவர் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்