![Rock stones fell and hit leg woman who was walking road, causing serious injury](http://image.nakkheeran.in/cdn/farfuture/PILr7UwCbKEirjFyj-JAK8DEzaFYHrApEACX0N_l4QU/1668777616/sites/default/files/inline-images/996_28.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் உள்ள குச்சி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது 33 வயது மகள் அஞ்சலை தன் ஊரிலிருந்து தினசரி திருக்கோவிலூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலை செய்வதற்காகச் சென்று வருவது வழக்கம்.
வழக்கம்போல் அஞ்சலை நேற்று ஓட்டல் வேலைக்குச் செல்வதற்காக திருக்கோவிலூர் புறவழிச்சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் சாலை போடும் பணி நடந்து வருகிறது. அதற்காக அப்பகுதியிலிருந்த பாறைகளை வெடி வைத்துத் தகர்த்துள்ளனர். அதில் வெடித்துச் சிதறிய பாறை கற்கள் நடந்து சென்றுகொண்டிருந்த அஞ்சலையின் கால்களில் சிதறி விழுந்ததில் கால் எலும்பு முறிந்து பலத்த காயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அஞ்சலையை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து மணலூர் பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அஞ்சலைக்கு விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அந்த இடத்தில் தரைப்பாலம் கட்டும் இடத்தின் அடியில் பெரிய பாறைகள் இருந்துள்ளன. அதனை உடைத்து எடுப்பதற்காக திருக்கோவிலூரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் வெடி வைத்துத் தகர்த்துள்ளார். இதனால் அதிலிருந்து சிதறிய கல் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த அஞ்சலையின் காலில் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டதாகத் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் அஞ்சலை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாலைப் பணியின்போது பாறைகளை உடைக்க வெடி வைக்கும் இடத்தில் முன்னெச்சரிக்கையாக போதிய பாதுகாப்பு ஏற்படுத்தி அப்பகுதி வழியாகச் செல்லும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். இது சாலைப் பணி செய்தவர்களின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.