![nn](http://image.nakkheeran.in/cdn/farfuture/5CvC1D7WBvJyYCfrOoOefXxmga-sqYU6j3gl-hBCA6Y/1668225834/sites/default/files/inline-images/n21936.jpg)
பிரபல நடிகர் ஆர்.கே வீட்டில் 200 சவரன் தங்கநகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் பெங்களூர் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை டிபென்ஸ் காலனியில் வசித்து வருபவர் நடிகர் ஆர்.கே. இவர் எல்லாம் அவன் செயல், அவன் இவன், ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் பின்புறமாக புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியைக் கட்டி போட்டுவிட்டு வீட்டிலிருந்த 200 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
![Robbery at Vijay film actor's house; Police released the photos](http://image.nakkheeran.in/cdn/farfuture/tZjY8UCPCLxvX2nvSzvwwQrolOfivxnBxIqVTN_w7g0/1668225884/sites/default/files/inline-images/n21937.jpg)
இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வீடு மற்றும் வீட்டுக்கு அருகிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் மூன்று பேரின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் நடிகர் ஆர்.கே.வின் வீட்டில் வேலை செய்து வந்த ரமேஷ் என்ற இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். தற்போது காவல்துறை பெங்களூர் விரைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.