பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் 45 வயது ராமச்சந்திரன். இவர் இவரது ஊருக்கு அருகிலுள்ள வேப்பூர் பஸ் நிலைய பகுதியில் ஒரு கட்டிடத்தில் பல ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அக்கம் பக்கம் உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குடும்ப செலவினங்களுக்காக தங்களது நகைகளை அடமானம் வைத்துவருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்றவர் கடையை திறப்பதற்காக நேற்று காலை வந்துள்ளார். அப்போது கடையில் இரண்டு இரும்பு கதவுகளை இணைத்து பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது.
அதையடுத்து ராமச்சந்திரன், குன்னம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரை அடுத்து குன்னம் போலீசார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். கொள்ளை அடித்து சென்ற வட்டிக்கடை அமைந்துள்ள வேப்பூர் இந்த ஊரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் கல்லூரி பத்திரப்பதிவு அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன அதனால் கிராமமாக இருந்தாலும் இந்த ஊர் அக்கம்பக்கம் கிராமத்தினர் வந்து செல்லும் மினி டவுன் போன்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். அப்படிப்பட்ட ஊரில் 50 பவுன் நகை ஒன்றரை லட்சம் பணம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் சுற்றுப்புற கிராம மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கொள்ளைபோன நகைகள் அனைத்தும் அப்பகுதி விவசாய மக்கள் அடகு வைக்கப்பட்ட நகைகளை எனவே விரைந்து காவல்துறை கொள்ளையர்களை கண்டுபிடித்து கொள்ளைபோன நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்யாவிட்டால் அந்த கடையில் அடகு வைத்த பொதுமக்கள் நகையைத் திருப்பிக் கேட்கும்போது நகைகளை எப்படி கொடுப்பது. அந்த கடைக்காரரின் நிலைமை மிகவும் சிக்கலாகி உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.