திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ்குமார், சென்னை கன்னியாகுமரி தொழில் தொடர் திட்ட இயக்குநர் பாஸ்கரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், காடுவெட்டி தியாகராஜன் மற்றும் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, “1651 ஆக்சிஜன் கொண்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து மாவட்டத்திலும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கட்டிடங்கள் கட்டும் போது தண்ணீர், மணல் போன்றவற்றை முறையாகப் பரிசோதனை செய்த பின்னரே கட்ட வேண்டு என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். இருவழிச் சாலைகளை எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றுவது, அதே போல் நான்கு வழிச்சாலைகளில் ஆறு வழிச்சாலைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகம் விபத்து ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து அங்கு போக்குவரத்து காவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அதனை சரி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள 245 தரைமட்ட பாலங்களை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். சாலைப் பணிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் தான் நிலம் கையகப்படுத்தும் பணியில் உள்ளனர். அதே நேரத்தில் அவர்களே மற்ற பணிகளையும் பார்க்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இதனை எல்லாம் கண்காணிக்க 5 டி.ஆர்.ஒக்களை நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிலம் கையகப்படுத்தும் பணிகள் தான் சாலைப் பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு தடையாக உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலையின் தரத்தைப் போல் ஊரக பகுதிகளில் உள்ள சாலைகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டுள்ளார். பூம்புகாரைச் சரி செய்ய புனரமைக்கும் பணிகள் நடைபெறும். எங்களுடைய ஆட்சியில் மோனோபோலி இல்லை - பத்திரிகைகளில் அப்படி செய்தி வலம் வருவதைப் பார்க்கிறேன். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தரமான சாலைகளை ஏற்படுத்த வேண்டுமென்பது தான் அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.