



அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருட்கள், சங்கத் தமிழர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.
அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது. “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.
அந்த வகையில், சூது பவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தைப் பறைசாற்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.