கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் சிதம்பரம், புவனகிரி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கடற்கரைக்கு வந்து கடலில் நீராடிச் செல்வார்கள். அதேபோல் இதற்கு அருகே உள்ள பெரிய குப்பம் கடற்கரைக்கும் பொதுமக்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் பெரிய குப்பம் கடற்கரைக்கு குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் மற்றும் அவரது உறவினர் பெண்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கடலூர் அருகே உள்ள தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாணிக்கம், தினேஷ், சரவணன், பிரவீன் உள்ளிட்டவர்கள் கும்பலாக மது மற்றும் கஞ்சா போதையில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இளம் பெண்களிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தட்டி கேட்ட இளம் பெண் ஒருவரை அவர்கள் கூட்டாகச் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதனைத் தடுக்க வந்த இளம் பெண்களை இளைஞர்கள் போதையில் தாக்கும் சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியளித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தியாகவல்லி கிராமத்தைச் சேர்ந்த சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான தினேஷ் என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிதம்பரம் அருகே கடற்கரையில் கஞ்சா போதையில் இளைஞர்கள் பெண்களிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.