கிருஷ்ணகிரி அருகே வேப்பனஹல்லி அருகே அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தியதற்கு எதிராக போலீசார் மேற்கொண்ட தையடியை அடுத்து காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு கல்வீச்சு சம்பவம் நடைபெற்றது.
ஜனவரி ஆரம்பத்திலேயே ஜல்லிக்கட்டு திருவிழா மற்றும் எருது விடும் திருவிழா ஆரம்பித்துவிடும். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹல்லியில் இன்று எருது விடும் திருவிழா ஆரம்பமானது. இந்த எருது விடும் விழாவிற்கு முறையாக அனுமதி வாங்கவில்லை இருந்தாலும் அந்த ஊர் பகுதியில் இருக்கும் எருதுமாடுகளை மட்டும் விழாவில் அனுமதிக்க இருப்பதாக கிராம மக்கள் கூற அதற்கு மட்டும் அனுமதியளித்திருந்து காவல்துறை.
இந்நிலையில் பல ஊர்களை சேர்ந்த எருதுகள் எருது விடும் திருவிழாவில் கலந்துகொண்டதால் போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் மக்கள் விழாவை கைவிடாத நிலையில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் வாக்குவாதம் முற்ற லேசாக தடியடி நடத்தி போலீசார் மக்களை கலைக்க முற்பட்டனர். அப்போது அப்பகுதி இளைஞர்கள் காவல்துறையினர் மீது கல்லெறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்போது அங்கு பதற்றம் உருவாகியுள்ளது. இந்த சம்பவத்தால் இனிவரும் காலங்களில் எருது விடும் விழாவிற்கு காவல்துறை அனுமதி வழங்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.