எனக்கும் முதல்வர் பதவி மீது ஆசை இருக்கிறது. நான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
பெரியார் சிலை அவமதிப்பு விவகாரத்தில் எச்.ராஜா வருத்தம் தெரிவித்து இருப்பதால் இத்துடன் விட்டு விடலாம். ஆனால், இனிமேல் இது போன்ற மனப்போக்கை அவர் மாற்றி கொள்ள வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்சனையில் தி.மு.க., அ.தி.மு.க., எம்.பி.க்கள் டெல்லியில் இணைந்து போராடுவது பாராட்டுக்குரியது. 4 மாநில தலைமை செயலாளர்கள் கூட்டம் என்பது வெறும் கண் துடைப்புதான். அதனால் எந்த முடிவும் வரப்போவது இல்லை. குறைந்த பட்சம் 4 மாநில முதல்- மந்திரிகளையாவது அழைத்து பேசியிருக்கலாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி குழுவினரை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது.
ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதை அறிவித்து விட்டனர். இருவருமே நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் நாங்கள் தான் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள். தினகரனும் முதல்வர் பதவிக்கு வருவேன் என்கிறார்.
காங்கிரஸ் மிகப்பெரிய கட்சி. அதன் தலைவரான எனக்கும் முதல்வர் பதவி மீது ஆசை இருக்கிறது. நானும் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர், மத்திய மந்திரி பதவிகளை வகித்தவன். எனவே முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதை முடிவு செய்ய வேண்டியது மக்கள் ஆகிய எஜமானர்கள் அல்லவா? ரஜினிகாந்த் எந்த கட்சியுடனும் கூட்டணி சேரமாட்டார் என ஏற்கனவே அறிவித்து இருக்கிறேன். அந்த நிலையில்தான் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.