ஊரடங்கு உத்தரவு மற்றும் வரத்து குறைவு உள்ளிட்ட மொக்கை காரணங்களைச் சொல்லி, அத்தியாவசிய பொருள்களைச் செயற்கையாக விலையேற்றி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
காய்கறி சந்தைகள், உணவகங்கள் உள்ளிட்டவை கட்டுப்பாடுகளுடன் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. மருந்தகங்கள் முழுநேரமும் செயல்படுகின்றன. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்திக் கொண்டு சில வியாபாரிகள் அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை இரு மடங்கு வரை விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மேல்பாஷா பேட்டையில் முருகன் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலையில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் கூறினர்.
இதையடுத்து, சார் ஆட்சியர் பிரதாப் மற்றும் அதிகாரிகள் முருகனின் அரிசி ஆலையில் திடீர் ஆய்வு நடத்தினர். விசாரணையில், அரிசியை கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை உயர்த்தி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அந்த அரிசி ஆலையை உடனடியாகப் பூட்டி சீல் வைத்தனர்.
சார் ஆட்சியர் பிரதாப் கூறுகையில், ''ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் உணவுப்பொருள்கள் மக்களுக்குத் தேவையான அளவு தடையின்றி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஊரடங்கு சமயத்தில், அத்தியாவசிய பொருள்களின் விலைகளை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற தருணங்களில் வியாபாரிகள், மக்கள் நலன் கருதி உதவும் நோக்கத்தில் செயல்பட வேண்டும். லாப நோக்கத்தில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்,'' என்றார்.