Skip to main content

ஆம்புலன்ஸில் பெண்ணை வைத்து போராடிய உறவினர்கள்! சீல் வைக்கப்பட்ட மருத்துவமனை! 

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

Relatives who struggled to keep the girl in the ambulance! Sealed hospital!
                                                 மாதிரி படம் 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் உள்ள பாண்டியன் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரலேகா (29). இவரது கணவர் பெருமாள் (37). இவர்களுக்குத் திருமணமாகி ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சந்திரலேகா மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். தங்கள் குடும்பத்திற்கு 2 குழந்தைகள் போதும், மூன்றாவது குழந்தை வேண்டாம் எனக் கருதிய கணவன் - மனைவி இருவரும் வயிற்றில் வளரும் சிசுவை கருக்கலைப்பு செய்ய முடிவு செய்தார்கள். 

 

அதன்படி சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கணவன் - மனைவி இருவரும் சென்றனர். அங்கு சந்திரலேகா, வயிற்றில் வளரும் குழந்தையைக் கருக்கலைப்பு செய்யுமாறு அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அதன்படி சந்திரலேகாவுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகம், அவரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளது.

 

அங்குக் கொண்டு சென்ற பிறகும் சந்திரலேகா உடல்நிலை மேலும் கவலைக்கிடமானது. இதையடுத்து, சந்திரலேகாவை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு அவரது உறவினர்கள் அவருக்கு ஏற்கனவே சிகிச்சை அளித்த சின்ன சேலம் தனியார் மருத்துவமனைக்கு மீண்டும் கொண்டுவந்தனர். அதைப் பார்த்து அங்கிருந்த மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், நேற்று முன்தினம் (04.10.2021) அந்தப் பெண்ணை ஆம்புலன்சில் வைத்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

 

இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்படி அந்தப் பெண்ணின் உறவினர்கள், அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது புகார் எழுதிக் கொடுத்தனர். மேலும், அந்தப் புகாரின் பேரில் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினர். சின்ன சேலம் தாசில்தார் அனந்தசயனன், வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் ஆகியோர் அந்தத் தனியார் மருத்துவமனையை மூடி அதிரடியாக சீல் வைத்தனர். கவலைக்கிடமாக இருந்த சந்திரலேகாவை ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவ குழுவினர் அடங்கிய டீம் அவருக்கு சிகிச்சை அளித்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சந்திரலேகா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது கணவர் பெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்