Skip to main content

ஆர்.எஸ்.பாரதி மீதான விசாரணைக்குத் தடை! - நீதிமன்றம் உத்தரவு!  

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

rs bharathi

 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேசியதற்காக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கிற்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கடந்த 2015 ம் ஆண்டு நவம்பர் 2 ம் தேதி சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அவதூறு வழக்குப் பதியப்பட்டது. இந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது..

 

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது..

 

அப்போது ஆர்.எஸ்.பாரதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், முதலமைச்சர் என்ற அடிப்படையில் அவர் செய்ய வேண்டிய மக்கள் பணி குறித்தே பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக விமர்சிக்க உரிமை உள்ளதாகவும், தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கவில்லை எனவும் வாதிட்டார். தொடர்ந்து, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்க உரிமை உள்ளது எனக் கூறி ஆர்.எஸ்.பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு குறித்து அரசுத் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்