இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்றுடன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை முடியவுள்ளது. ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வர இருக்கிறார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து தமிழகம் வர இருக்கிறார்.
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சி தேர்தல் நடைமுறையை மீறும் செயல், எனவே ரத்து செய்ய வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தும் நிலையில் திமுக சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் இது தொடர்பாக விளக்கங்கள் கொடுத்துள்ளார். 'பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை. பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை காரணமாக கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் விவேகானந்தர் பாறையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.