கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடுமுழுவதும் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 16ம்தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 5 மையங்களில், இந்த தடுப்பூசிபோடும் பணியானது தொடர்ந்து நடைபெற்றுவந்தது.
இதைத் தொடர்ந்து, முன்களப் பணியாளர்களான வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை சார்ந்த பல்வேறு துறையினருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அந்தவகையில் வருவாய்த்துறையின் கீழ் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை முதல்வர் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஆட்சியர், "1,362 பேர் வருவாய்த்துறையில் பதிவுசெய்து தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்றையதினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திருச்சி மாவட்டத்தில் 4,342 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 25ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ஒருவாரத்திற்குள் 50சதவீதம் இலக்கு அடைந்துவிடலாம். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு எந்த விதப் பக்கவிளைவும் வந்ததாக தகவல் இல்லை.
அடுத்தகட்டமாக பொதுமக்களுக்கு செயலி மூலம் பதிவுசெய்து தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி குறித்து வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்கள் பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.