![Red Alert for 4 districts ...](http://image.nakkheeran.in/cdn/farfuture/0zHl-1e9Nub3aNDmxdb52SCfBiiaOMz7oWJpiuyP5Ik/1640878179/sites/default/files/inline-images/RE6T46.jpg)
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை புறநகர்ப் பகுதியில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 6 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பொழிந்து வருகிறது. நகரின் முக்கிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது வரை இடி மின்னலுடன் சென்னையின் பல இடங்களில் மழைபொழிந்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வேளச்சேரி, மயிலாப்பூர், மீனம்பாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைபொழிந்து வருகிறது.
தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான 'ரெட் அலர்ட் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2,000 கன அடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.