சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் சிவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (18/04/2021) சென்னையைச் சேர்ந்த தனது நண்பர்கள் வெங்கடேசன், சம்பத், ராஜேந்திரா ஆகியோருடன் ரியல் எஸ்டேட் தொழில் சம்மந்தமாக நிலம் பார்ப்பதற்காகவும், அதை விலை பேசுவதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்திற்கு சிவன் வந்துள்ளார். பின்னர், விழுப்புரம் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஒரு உணவகத்தில் அனைவரும் உணவருந்தியுள்ளனர்.
அதன்பிறகு அவர்களைச் சந்திப்பதற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் நாகராஜ் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் சிவனை தனியாக அழைத்துச் சென்று சிறிது நேரம் பேசியுள்ளார். பின்னர் ரியல் எஸ்டேட் விற்பனை செய்வதற்கான நிலத்தைப் பார்ப்பதற்காக நாகராஜ் அவரது காரில் சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் அருகேயுள்ள கண்டாச்சிபுரம் சென்றுக் கொண்டிருந்தனர்.
அந்த காரை வெங்கடேசன், சம்பத் ஆகியோர் இன்னொரு காரில் பின் தொடர்ந்து சென்றனர். மாலை 05.00 மணியளவில் அவர்களது கார்கள் மழுவந்தாங்கல் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று இவர்களைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் ஐந்து பேர், நாகராஜ் ஓட்டிச் சென்ற காரை மடக்கி நிறுத்தினார்கள். பின் அதில் இருந்து பரபரப்போடு இறங்கிய ஐந்து நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி சிவன் மற்றும் ராஜேந்திரா ஆகிய இருவரையும் தங்கள் காரில் கடத்திச் சென்றனர்.
அந்த காரை பின்தொடர்ந்து நாகராஜ் தனது காரில் சென்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் உள்ளிட்டோர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் அதிரடிப் படை காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் சிவன், ராஜேந்திரா ஆகியோரின் செல்ஃபோன் எண்களில் காவல்துறையினர் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, சிவன் கூறியதாவது, "தன்னை யாரும் கடத்தவில்லை. தொழில் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தங்களை அழைத்துச் சென்றுள்ளனர். தாங்களே வந்து விடுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் அவருடன் கடத்தப்பட்ட ராஜேந்திரா சேலம் அருகில் தங்களை கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.
இதனால் குழப்பம் அடைந்த காவல்துறையினர் இருவரின் செல்ஃபோன் எண்களை வைத்து, சிக்னல் எந்தப் பகுதியைக் காட்டுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதில் சிக்னல் கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதியைக் காட்டியுள்ளது. இதையடுத்து காவல்துறையினர், கண்டாச்சிபுரம் காட்டுப்பகுதியில் கடத்தப்பட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். துப்பாக்கி முனையில் தொழிலதிபர் இருவர் கடத்தப்பட்டது உண்மையா?நாடகமா? என்பது கடத்தப்பட்ட இருவரும் மீட்கப்பட்ட பிறகு தெரியவரும். மேலும் இச்சம்பவம் மாவட்ட முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.