ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370, மத்திய அரசால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்றது. அங்கு பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, மத்திய அரசு பல கட்டுப்பாடுகள் விதித்தது. அதுமட்டும் இல்லாமல் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களை தடுப்புக் காவலில் வைத்தது.
இதற்கிடையில் காவலில் இருக்கும் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது இந்தியாவின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி இருவரும் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு கண்டன் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், "இந்த நாட்டில் சுதந்திர காற்றை சுவாசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. பிரதமர் மோடி காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்து விட வேண்டும். புதிய புதிய காரணங்களை கண்டுபிடித்து காஷ்மீர் அரசியல் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிடவேண்டும்" என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.