திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பிரிவு விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி, சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். அதன்படி இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி புதிதாக துவங்கப்பட உள்ள பல்கலைக்கழகத்திற்கு என்ன பெயர் வைக்கப் போகிறீர்கள் என்று சட்டசபையில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் பழனிசாமி, பல்கலைக்கழகம் துவங்கும்போது அதற்கான பெயர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். தற்போது விழுப்புரத்தை தலைமையிடமாகக்கொண்டு துவங்கப்பட இருக்கும் புதிய பல்கலைக்கழகத்திற்கு பாரி மன்னனின் அரசவையில் கவிஞராகவும் அரசரின் உற்ற நண்பராகவும் இருந்த கபிலர் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.
அரசன் பாரியின் நாட்டின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்து வந்தபோது வள்ளல் பாரி தன் இருமகளான அங்கவை, சங்கவை இருவரையும் கவிஞர் கபிலன் இடம் ஒப்படைத்தார். அவர்களை அழைத்துவந்த கபிலர், திருக்கோவிலூர் பகுதியைத் தலைமையிடமாகக்கொண்டு ஆட்சிசெய்து வந்த மலையமான் நாட்டு மன்னனுக்கு இருவரையும் மணமுடித்து வைத்தார். அப்படிப்பட்ட கபிலர், திருக்கோவிலூர் நகரை ஒட்டி செல்லும் தென்பெண்ணை ஆற்றின் மையப்பகுதியில் ஒரு குன்று உள்ளது. அந்த குன்றின் மீது ஏறி கபிலர் உண்ணா நோன்பிருந்து தன் உயிரை நீத்துள்ளார் என்பது வரலாறு.
தற்போதும் கபிலர் உயிர் நீத்த அந்த குன்று நினைவுச் சின்னமாக ஆக்கப்பட்டு கபிலர் குன்று என்று அழைக்கப்பட்டு வருகிறது. திருக்கோவிலூர் பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் அந்த குன்றை வியப்போடு பார்த்து செல்கிறார்கள்.
கபிலருக்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் திருக்கோவிலூர் பகுதியை உள்ளடக்கி உருவாக இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு கபிலர் பெயரை சூட்ட வேண்டும் அதுவே மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை தமிழ் ஆர்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.
இதன்மூலம் திருவள்ளுவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சங்கப் புலவர் கபிலரின் பெயர் வைப்பது பொருத்தமாக இருக்கும் எனவே கபிலர் பல்கலைக்கழகம் என பெயர் வைப்பதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ள வேண்டும் வேறு ஏதேனும் பெயர்களை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டியதில்லை. மேலும் திருக்கோவிலூரில் ஒவ்வொரு ஆண்டும் கபிலர் விழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது பெயரே பல்கலைக்கழகத்திற்கு பொருத்தமானது என்று தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.