மதுரையில் திருவிழாவிற்கு வந்த சிறுமியை இரட்டை சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அந்த 16 வயது சிறுமி கடந்த ஞாயிறு அன்று பக்கத்துக்கு கிராமத்தில் நடந்த திருவிழாவை காண தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். திருவிழாவை முடித்துக்கொண்டு மாலை தோட்டத்தில் குளிக்க சென்ற நிலையில் சிறுமி காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விடிய விடிய குடும்பத்தாரும், உறவினர்களும் சிறுமியை தேடியநிலையில் அடுத்த நாள் சடலமாக மீட்கப்பட்டார் அந்த சிறுமி.

இதுகுறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியதில் அதே பகுதியை சேர்ந்த மாதவன் என்ற இளைஞரை போலீசார் விசாரித்தபொழுது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளான். கைது செய்யப்பட்டு அவனிடம் விசாரணை நடத்தியதில் மாதவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். திருவிழாவை காணவந்த சிறுமியை பார்த்து காதல் கொண்ட மாதவன் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அந்த சிறுமியிடம் கூறியுள்ளான். ஆனால் அந்த சிறுமி மறுக்கவே அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்துள்ளான்.


இதில் மேலும் ஒரு கொடுமை மாதவனின் அண்ணனான மதுவும் இந்த பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளான். இந்த சம்பவத்தில் மாதவன் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவனது அண்ணன் மதுவை போலீசார் தேடிவருகின்றனர். திருவிழாவிற்கு வந்த சிறுமியை இரட்டை சகோதரர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.