மீனவர்களுக்கு வழங்கவேண்டிய உயிர்காப்பு மிதவைகளை, மீன்வளத்துறை அலுவலகத்திலேயே குப்பையாக குவித்து வைப்பதற்கு பதிலாக எங்களுக்காவது கொடுத்திருக்கலாமே..? எங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வோமே..? என பரிதவிக்கின்றனர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.
வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடல் பகுதிகள் அனைத்துமே சீற்றத்துடன் காணப்படுகின்றது. இதில் ராமேஸ்வரம் கடல் பகுதி மிக அதிகளவு கடல் சீற்றத்துடன் தற்பொழுது வரை உள்ளது. இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் படகுகள் சேதமடைவதுடன் மூழ்கியும் விடுகின்றது. படகுகளில் பயணம் செய்யும் மீனவர்களின் கதியும் அதோ கதி தான்.! இதில் பல மீனவர்கள் பலியான கதை இன்று வரை தொடர்கின்றது.
இதுபோன்ற காலகட்டங்களில் கடலுக்கு செல்லும் மீனவர்கள், தங்கள் உயிர்களை பாதுகாத்து கொள்வதற்காக உயிர்காப்பு மிதவைகளை கொண்டு செல்ல வேண்டும் என நாங்கள் தெரிவித்திருந்த போதிலும், மீனவர்கள் அதனைக் கடைபிடிப்பதில்லை அதனாலேயே இச்சம்பவங்கள் நிகழ்கின்றது என அறிக்கை விட்டு தப்பித்துக் கொண்டது மீன்வளத் துறை. " இல்லையில்லை.!!! மீன்வளத்துறை கூறுவது முற்றிலும் பொய்..!!! எங்களுக்கு வழங்கவேண்டிய உயிர்காப்பு மிதவைகளை இது வரை மீன்வளத்துறை கொடுத்தது இல்லை. அத்தனை உயிர்காப்பு மிதவைகளையும் அதே அலுவலகத்தில் குப்பையாக குவித்து வைத்துள்ளனர். அதனை எங்களுக்கு வழங்கினால் எங்களது உயிராவது காப்பாற்றப்படுமல்லவா..?" என மீன்வளத்துறை அலுவலகத்தில் குப்பையாக குவிந்திருக்கும் உயிர்காப்பு மிதவைகளை வீடியோவாக எடுத்து வாட்ஸ் அப்பில் வைரலாக்கி வருகின்றனர் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்.