
கரோனா வைரஸ் தொற்று ஊரடங்குக் காலத்திலும், ரூபாய் 70 கோடி மதிப்பீட்டிலான துறைமுக பணி, தொடர்ச்சியாய் துரிதமாக நடைபெற்று வருவதால் பல நாள் துயரத்திற்கு விடிவு கிடைத்துள்ளதாக மீனவர்கள் மிகுந்த மிகிழ்ச்சியில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதி மீனவர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள மீனவர்களும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் போது, இலங்கை கடற்படையால் சுடப்படுவதும், தாக்கப்படுவதும் சிறைப்படுவதும் தொடர்ச்சியாய் நடைப்பெற்று வருகின்றது. இதற்குக் காரணம் 1976- ஆம் ஆண்டு மேற்கொள்ளப்ட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தின் படி ராமேஸ்வரம் தீவுப் பகுதி மீனவர்களின் எல்லை குறுகிவிட்டது.

இதன் காரணமாகவே இலங்கை எல்லையை எளிதாக அடைய, மீனவர்களுக்கு சொல்லொணா துயரம் ஏற்படுகின்றது. இதனைத் தவிர்க்கும் பொருட்டும், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஏதுவாகவும் பாம்பனில் துறைமுகம் அமைத்தால் இப்பிரச்சனை ஏற்படாது எனத் தீவுப்பகுதி மீனவர்கள் பல வருடங்களாகக் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய- மாநில அரசுகள் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித்திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக ரூ.70கோடி செலவில் பாம்பன் குந்துகால் பகுதியில் துறைமுகம் கட்ட நிதி ஒதுக்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணிகள் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுமானத்திற்குத் தேவையான மணல் கிடைக்காததால் பணி தொய்வு அடைந்தது. எனினும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று மணல் பெற்று கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் தற்பொழுது துறைமுக பகுதியில் உள்ள தேவையற்ற நீர் பிடிப்புகளை மணல் கொண்டு மூடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியும் விரைவாக நடைபெற்று வருவதால் துறைமுகம் பணி விரைவில் முடிவடைந்து விடும் என்பதால் தங்களுடைய பல நாள் துயரம் முடிவிற்கு வந்த மகிழ்ச்சியில் இப்பகுதி மீனவர்கள் உள்ளனர்.