மத்திய அரசைத் தட்டிக்கேட்கும் அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் இரண்டாம் கட்டத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய ஸ்டாலின், "மக்கள் கூட்டத்தைப் பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் என்று தெரிகிறது. கோரிக்கை மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க தனியாகத்துறை உருவாக்கப்படும். ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களில் 100- க்கு 95 மனுக்களுக்கு முடிந்தவரை தீர்வு காணப்படும். 'நிவர்', 'புரெவி' புயல் பாதிப்புக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. மத்திய அரசைத் தட்டிக்கேட்கும் அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கும். கடைசி நேரத்திலும் டெண்டர் விடும் அரசாக அ.தி.மு.க. ஆட்சி உள்ளது. அ.தி.மு.க. அரசுக்கு இந்தச் சட்டப்பேரவை கூட்டம்தான் கடைசிக் கூட்டமாக இருக்கும். ஏழு பேர் விடுதலை பற்றி அ.தி.மு.க. அரசு இன்னும் எதுவும் பேசாமலேயே உள்ளது. ஏழு பேர் விடுதலை பற்றி ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார்" இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.