மகாராஷ்டிர மாநிலம், புனே அடுத்துள்ளது லோஹிகன். இப்பகுதியைச் சேர்ந்தவர் 'ஷம்பு காளிதாஸ் காண்ட்வே' என்ற ஷவுரியா. 11 வயதான இவர், ராமன்பாக் நகரில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, அவருக்கு தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை என்பதால் நண்பர்களுடன் சிறுவன் விடுமுறையைக் கழித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த மே 2 ஆம் தேதி சிறுவன் ஷவுரியா லோஹேகான் பகுதியில் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். விடுமுறை என்பதால் கூட்டாக கிரிக்கெட் விளையாடச் சென்றவர்கள், டர்ஃப் விக்கெட் ஒன்றை தேர்ந்தெடுத்து குழுவாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடினர். அப்போது, சிறுவன் ஷவுரியா எதிர்முனையில் நின்ற பேட்டருக்குப் பந்து வீசினார். அந்தப் பந்தை எதிர்கொண்ட பேட்டர் அதை நேராக ஓங்கி அடித்துள்ளார். பந்தானது, பேட்டர் அடித்த வேகத்தில் கண்இமைக்கும் நொடியில் சிறுவன் ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாகத் தாக்கியது. இதனால், சிறுவன் வலியால் துடித்துள்ளார். உடனே, பந்தை அடித்த பேட்டர் ரன் எடுக்க பவுலிங் எண்டுக்கு ஓடிய நேரத்தில் வலியால் துடித்த ஷவுரியா, நிலைதடுமாறி மைதானத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதையடுத்து, ஷவுரியா சுருண்டு விழுந்ததைப் பார்த்து பதறிப்போன சக நண்பர்கள் ஷவுரியாவை எழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவரை எழுப்ப முடியவில்லை. இதனால், செய்வதறியாமல் திகைத்தவர்கள் உடனே அருகில் இந்தப் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து ஷவுரியாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஷவுரியா ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அவரது குடும்பத்தினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து லோஹிகன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிய சிறுவன் திடீரென பந்து தாக்கி உயரிழந்தாக கூறப்படும் நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சிறுவன் ஷவுரியா பந்து வீசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அப்போது, திடீரென பேட்டர் அடித்த பந்து ஷவுரியாவின் பிறப்புறுப்பைப் பலமாக தாக்குகிறது.
அடுத்த சில நிமிடங்களிலேயே சிறுவன் சுருண்டு விழுகிறார். பின்னர், அவரை நண்பர்கள் எழுப்ப முயற்சிக்கின்றனர். முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் வந்து சிறுவன் ஷவுரியாவை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், நடந்த சம்பவம் விபத்து எனத் தெரியவந்து இருப்பதாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சிறுவன் ஷவுரியா உயிரிழப்பு குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கையில், " ஷவுரியா 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆனால், அவருக்கு விளையாட்டு மீதே அதிக ஆர்வம் இருந்தது. அவர் கனவே மல்யுத்த வீரராக வேண்டும் என்பதுதான். அதற்கான பயிற்சியும் எடுத்து வந்தார். இப்படியான சூழலில் சிறுவன் ஷவுரியா மரணம் எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. அவரின் இழப்பு மிகுந்த மனவருத்தத்தை தருகிறது..'' எனக் கூறினர்.
புனே அருகே விளையாடச்சென்ற இடத்தில் 11 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் பகுதியில் பந்து தாக்கி சுருண்டு விழுந்து உயரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.