
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வந்தது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் சாம் பிட்ரோடா, பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, பரம்பரை வரி குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து, சாம் பிட்ரோடா தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது, “அமெரிக்காவில் வாரிசு சுமை வரி ஒன்று உள்ளது. ஒருவருக்கு 100 மில்லியன் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறந்த பிறகு 55 சதவீதம் சொத்தை அரசு எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 45 சதவீத சொத்துக்கள் மட்டுமே இறந்த நபரின் குழந்தைகளுக்கு அளிக்கப்படும். இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். உங்கள் தலைமுறையில் நீங்கள் செல்வம் சம்பாதித்தீர்கள். இப்போது நீங்கள் மரணம் அடைகிறீர்கள் என்றால், உங்கள் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அது அனைத்தையும் அல்ல. அதில் பாதி. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது” என்றார். காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா. இவரின் கருத்து நாடு முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியது. சாம் பிட்ரோடாவின் கருத்தை பா.ஜ.க கடுமையாக விமர்சனம் செய்தது. சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா நகரில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, சாம் பிட்ரோடா கருத்தை மேற்கோள் காட்டி காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.
இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று (07-05-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசிய அவர், “இந்தியா கூட்டணிக் கட்சியினர், மக்களின் தலைவிதியைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் தங்கள் வம்சத்தை காப்பாற்ற தேர்தலில் போராடுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். மேலும், இங்கு காங்கிரஸில் உள்ளவர்களும், மோடிக்கு எதிராக ஜிகாத் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் மோடிக்கு எதிராக ஒன்றுபட்டு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று கற்பனை செய்து பாருங்கள்.
வாக்கு ஜிகாத் என்ற கருத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? இது ஜனநாயகத்தில் வேலை செய்ய முடியுமா? இந்திய அரசியல் சட்டம் இதை அனுமதிக்கிறதா? இதைப் புரிந்து கொள்ள, 20-25 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர்களாகவும், தலைவர்களாகவும் இருந்து, இப்போது கட்சியை விட்டு வெளியேறும் நபர்களின் பேச்சைக் கேட்க வேண்டும். நான் காங்கிரஸ் இளவரசரிடம் கேட்கிறேன். பாகிஸ்தான் மீது ஏன் இவ்வளவு அன்பும், நமது ராணுவத்தின் மீது இவ்வளவு வெறுப்பும் ஏன்? பாகிஸ்தானின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் வாக்கு வங்கியைப் பலப்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை திரும்பக் கொண்டு வரவோ, அயோத்தியில் ராமர் கோவிலுக்கு ‘பாபர் பூட்டு’ போடவோ, தேசத்தின் காலி நிலங்களையும் தீவுகளையும் பிற நாடுகளுக்குப் பரிசாகக் கொடுக்கவோ காங்கிரஸ் கட்சிக்கு 400 இடங்கள் தேவை.
அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலை அமைப்பதற்கான 500 ஆண்டுகால காத்திருப்புக்கு உங்கள் வாக்கு மூலம் முடிவு கிடைத்துள்ளது. இந்தியா வரலாற்றில் ஒரு திருப்புமுனையில் உள்ளது. வாக்கு ஜிகாத் பலிக்குமா? அல்லது ராம ராஜ்ஜியமா? என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்” என்று சர்ச்சையாக பேசினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், வெளிநாடு வாழ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா தற்போதைய கருத்து நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் ஊடகம் ஒன்றிற்கு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா காணொளி வாயிலாக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், “இந்தியாவைப் போன்ற பல்வேறு தரப்பினர் வாழும் தேசத்தை நாம் சிறப்பாக வைத்திருக்க முடியும். இந்தியாவின் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் தோற்றம் அளிக்கிறார்கள். ஆனால், இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று தெரிவித்தார். சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்து, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்களை நிற வேற்றுமையுடன் வெளிநாட்டு மக்களுடன் ஒப்பிட்டு பிட்ரோடா பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியுள்ளதாவது, “இந்தியாவின் பன்முகத்தன்மையை விளக்குவதற்காக சாம் பிட்ரோடா ஒப்புமைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இந்திய தேசிய காங்கிரஸ் இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல், ஆந்திரா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட பிரதமர் மோடி, “நாட்டின் பல நபர்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள். இந்தத் தோல் நிற விளையாட்டுக்கு இளவரசர்களுக்கு அனுமதி வழங்கியது யார்? குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவின் வேட்புமனுவை காங்கிரஸ் ஏன் எதிர்த்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அவர்கள் ஏன் திரௌபதி முர்மு என்ற பழங்குடியினத்தவரை தோற்கடிக்க முயன்றார்கள் என்பது இப்போது எனக்கு தெரியும். இளவரசரின் (ராகுல் காந்தி) மாமா அமெரிக்காவில் இருக்கிறார். அவர் அவரது தத்துவவாதி மற்றும் வழிகாட்டி. கருமையான சருமம் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். இப்போது புரிகிறது, அவர்களும் திரௌபதி முர்முவை ஆப்பிரிக்கர் என்று நினைத்தார்கள். அவருடைய தோல் கருமையாக இருப்பதால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடாவின் கருத்து மகாராஷ்டிரா மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? தமிழர் பெருமையைக் காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை முறிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயாரா?” என்று சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.