
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸை வீழ்த்தி பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதே வேளையில், தனிப்பெருபான்மையுடனோ அல்லது மாநிலக் கட்சிகளின் ஆதரவுடனோ சில மாநில அரசுகளை காங்கிரஸ் தங்கள் பக்கம் வைத்திருந்தது. அதில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களை வைத்திருந்த காங்கிரஸ் அரசை கவிழ்த்து பா.ஜ.க அந்த மாநிலத்தை கைப்பற்றியது. மேலும், சில மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் கொண்டு வந்து ஆட்சியை பிடித்தது. இதை தான், காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க பெரும்பான்மை உள்ள மாநிலத்தில் மாநில கட்சியும், சுயேட்சை எம்.எல்.ஏக்களும் தாமாக முன்வந்து காங்கிரஸுக்கு ஆதரவு தந்து ஆட்சி கவிழும் சூழ்நிலையில் இருப்பது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ஹிரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 45 எம்.எல்.ஏக்கள் தேவை என்ற பட்சத்தில் அந்தத் தேர்தல் நடைபெற்றது.
90 தொகுதிகளுக்காக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 40 தொகுதிகளும், காங்கிரஸ் 31 தொகுதிகளும் வெற்றி பெற்றன. மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது. லோக் தள கட்சி 1 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 7 இடத்தில் வென்றனர். பெரும்பான்மை ஆட்சி அமைக்க 45 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, 10 தொகுதிகள் வென்ற ஜனநாயக ஜனதா கட்சியினுடமும், சுயேட்சை வேட்பாளர்களுடனுமும் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. அதன் அடிப்படையில், பா.ஜ.க சார்பில் மனோகர் லால் கட்டார் ஹரியானா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பா.ஜ.க-வுடன் சுமூக தீர்வு எட்டப்படாததால் ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை முறித்துக்கொண்டது. இதையடுத்து, பா.ஜ.க-வைச் சேர்ந்த முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஹரியானா சட்டசபையில் மொத்தம் 89 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க ஆதரவு தெரிவித்து வந்த சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று பேர் ஆதரவை திரும்ப பெற்று வாபஸ் பெற்றனர். இதனால், ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. ஆனால், 43 எம்.எல்.ஏக்கள் கொண்டு, காங்கிரஸை விட பா.ஜ.கவுக்கு இன்னமும் பெரும்பான்மையில் இருக்கிறது. காங்கிரஸுக்கு 30 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். மேலும். பா.ஜ.கவில் இருந்து விலகிய 3 சுயேட்சை வேட்பாளர்கள், காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். 45 எம்.எல்.ஏக்கள் கொண்டு ஆட்சி அமைக்க தேவை என்ற பட்சத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மேலும் 13 எம்.எல்.ஏக்கள் தேவை.
யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ஜ.க அரசு கவிழும் சூழ்நிலையில் இருக்கிறது. அதே வேளையில், ஹரியானாவில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், ஹரியானாவில் பாஜக அரசு கலைக்கப்பட்டு தேர்தல் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.