தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4 ஆவது ஆண்டில் நேற்று (07.05.2024) அடியெடுத்து வைத்தார். இதனையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “வணக்கம், மக்களின் நம்பிக்கையையும், நல் ஆதரவையும் பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன். 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7. இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி.
திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வதுதான் உண்மையான பாராட்டு. 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!’” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் மூன்றாண்டு ஆட்சியை விமர்சிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத, அளித்த வாக்குறுதிகளில் மக்களுக்கு பயனளிக்கும் எதையும் நிறைவேற்றாத அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் நடத்துவது சொல்லாட்சியல்ல, செயலாட்சி என்று கூறியிருக்கிறார். கடந்த 36 மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறியுள்ளது. தமிழகத்தில் அதிமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் சட்டத்தின் மாட்சிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆளும்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 36 மாதங்களாக எந்த ஒரு புது திட்டங்களும் இந்த ஆட்சியில் செயல்படுத்தவில்லை. மாறாக, அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட, செயல்படுத்தப்பட்ட பணிகள் இந்த ஆட்சியில் ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததுதான் இந்தத் திமுக அரசின் சாதனை' என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிக்கைக்கு திமுக கண்டனம் தெரிவித்து பதில் அறிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் 'இருளில் மூழ்கடித்த ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. குட்கா விற்பனை, பொள்ளாச்சி பாலியல் சம்பவம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு எல்லாம் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்தது. தமிழ்நாட்டுக்கு பொற்கால ஆட்சியை தந்தது போல திமுக ஆட்சியை இபிஎஸ் விமர்சித்திருக்கிறார்' எனத் தெரிவித்துள்ளார்.