திருச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் காவிரி மேலாண்மை வாரியம் பற்றிய கேள்விகளுக்கு பதில் கூறுகையில்,
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புப்படி 6 வார காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் இதேபோல் 2016-ல் கூட நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது அப்போதும் பல சாக்குபோக்குகளை சொல்லி தாமதித்தது.
இப்பொழுதும் அதே நாடக்கத்தைதான் அரசு கையாளுகிறது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. ஆனால் தமிழக அரசு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தோ ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தோ அதன் இயலாமையை மறைக்க முடியாது. மாநிலத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் மத்திய அரசின் எடுபிடிகள் போல் நடக்கிறது தமிழக அரசு.
இதை கருத்தில் கொண்டு மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாநாடு காவிரி பிரச்சனையை பற்றி பேசும். வெறும் பிரச்சனையை மட்டும் பேசாது, தீர்வுக்கான வழிகளையும் முன்னிறுத்தும். மேலும் இந்த மாநாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியமான துறைகளின் கொள்கைளின் கோட்பாடுகள் அறிவிக்கப்படும். இன்னும் ஐந்து மாதத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முழு கொள்கையும் தயாரிக்கப்படும் என கூறினார்.