நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து, கேரளா, கர்நாடகா போன்ற 89 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. அடுத்ததாக 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் ஆலோசகரும் காங்கிரசின் நிர்வாகியுமான சாம் பிட்ரோடா பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் 'பல வடிவங்களில் உள்ள இந்தியர்களை ஒருங்கிணைத்தது காங்கிரஸ்தான். குறிப்பாக ஆப்பிரிக்கர்கள் போல இருக்கின்ற தென்னிந்தியர்களை இணைத்தது காங்கிரஸ்' எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சாம் பிட்ரோடா பரம்பரை சொத்து வரி குறித்து பேசியது சர்ச்சையாகி இருந்தது.
காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடா தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக பேசியிருந்தது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் உடனான கூட்டணியை முறிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயாரா? எனப் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேசுகையில், 'காங்கிரஸ் நிர்வாகி சாம் பிட்ரோடாவின் கருத்து மகாராஷ்டிரா மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா? தமிழர் பெருமையைக் காக்க காங்கிரஸ் உடனான கூட்டணியை முறிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தயாரா?' எனச் சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.