சென்னை, வில்லிவாக்கம் அடுத்து அமைந்துள்ளது கொளத்தூர். இப்பகுதியில் உள்ள செந்தில் நகர் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, செந்தமிழன் என்னும் சரக்கு வாகன ஓட்டுனர் வியாசர்பாடியில் இருந்து பள்ளி புத்தகங்களை ஏற்றிக் கொண்டு கொளத்தூர் வழியாக திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு இடங்களுக்கு சவாரி சென்றுள்ளார். அந்தச் சரக்கு வண்டியை செந்தில் நகர் சிக்னல் அருகே நின்ற போக்குவரத்து போலீசார் வழிமறித்துள்ளனர்.
உடனே, வண்டியை ஓரங்கட்டிய ஓட்டுநர் செந்தமிழன் தன்னோடு வந்த ஸ்கூல் இன்ச்சார்ஜ் ஒருவரை போலீசாரிடம் என்ன காரணம் நிறுத்தியதற்கு எனக்கேட்டு வர அனுப்பியுள்ளார். அதற்கு போலீசாரிடம் ஸ்கூல் இன்ச்சார்ஜ் விளக்கம் கேட்டதற்கு, ''சின்ன கேசு ஒன்னு போட்டு போங்க.. டிரைவர வர சொல்லுங்க..''என்று கூறியுள்ளார். அதற்கு, ''அவர் வண்டியின் ஓட்டுநரை வர சொல்கிறேன்..'' எனக் கூறி செந்தமிழனிடம் வந்து போலீசார் கூறியதை சொல்லியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ந்து போனவர், வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்த போலீசாரிடம் உரிய ஆவணங்களுடன் சென்று பார்த்துள்ளார். தொடர்ந்து, எதற்காக வழக்குப்பதிவு எனப் போலீசாரிடம் கேட்டுள்ளார். அதற்கு போலீசார்,''Obstruction தம்பி..'' என்று மட்டும் பதில் சொல்லியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஓட்டுநர் செந்தமிழன் எதற்கு Obstruction எனக் கேட்க போலீஸ் அதிகாரி சரியான பதில் கூறவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, நான் வீடியோ எடுப்பேன் எனக் கூறி நடந்ததை தனது செல்போனில் ஓட்டுநர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், பேசும் ஓட்டுநர் செந்தமிழன், ''உரிய ஆவணங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது. வண்டியில் குறைந்த அளவிலேயே சரக்கு ஏற்றப்பட்டு இருக்கிறது. அதுவும் பள்ளி புத்தகங்கள் தான். ஆனால், போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் Obstruction எனக் கூறி அபராதம் கட்ட சொல்கிறார். எனக்கு Obstruction என்றால் என்ன என்று சொல்லுஙகள் சார்..''எனப் போலீஸாரிடம் கேட்கிறார். தொடர்ந்து, ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடி Obstruction குறித்து கேள்வி கேட்க, அதற்கு போலீஸ் அதிகாரி சரியான பதில் சொல்லாமல் அபராதம் வசூலிக்கவே முற்படுகிறார்.
இதனால், கோபமடைந்த ஓட்டுநர் செந்தமிழன், ''உங்க ஐடி காட்டுங்க சார்..'' எனக் கேட்க, அதற்கு போலீஸ் அதிகாரி, ''உங்க லைசென்ஸ் காட்டுங்க..'' எனக் கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, ஓட்டுநர் வீடியோ எடுத்ததால் செல்போனை வைத்து போலீஸ் அதிகாரி பெயரை மறைத்ததாகவும், அதனால் பதிலுக்கு ஓட்டுநர் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு மற்றோரு காவலர் வருகிறார். அவரிடமும் நடந்ததை ஓட்டுநர் கூற, ''நான் தான் போக சொன்னேனே..''என கூறுகிறார். ஆனால், மற்றொரு காவலர் 500 அபராதம் விதிப்பேன் என கூறிக் கொண்டு இருக்க, ஓட்டுநர் செந்தமிழன் துணிச்சலுடன், ''நான் என்ன படிக்காத ஆளா.. பிஎஸ்சி மேக்ஸ் டிகிரி ஒல்டர்.. எட்டு வருஷம் பேங்ல வேலை பார்த்தேன்.. எதுக்காக அபராதம் போடுறீங்க தானே கேட்டேன்..'' என கூறுகிறார்.. ஆனால், வீடியோவில் கடைசி வரை போக்குவரத்து போலீசார் எதற்காக அபராதம் என சொல்லவே இல்லை.
இதனால், விரக்தியடைந்த ஓட்டுநர் செந்தமிழன், நான் இது குறித்து புகார் அளிப்பேன் எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுச் செல்வதுடன் அந்த வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசாரிடம் துறைரீதியாக விசராணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடுத்த கொளத்தூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இருந்தும் அபராதம் விதித்ததாக, காவல்துறையினரிடம் வாகன ஓட்டுநர் வாக்குவாதம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.