நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அடுத்து வரவிருக்கும் மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்காக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில், கர்நாடகா மாநிலத்தில் சில தொகுதிகளில் மட்டும் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, மீதமுள்ள மற்ற தொகுதிகளில் நாளை (07-05-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று (05-05-24) முடிவடைந்தது. இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “எங்கள் பிரச்சாரத்தில் மோசமானது என்று எதுவும் இல்லை. இதையெல்லாம் நாட்டுக்காகச் செய்கிறோம். நாட்டைக் கெடுப்பவரை தடுக்கும் வேலையைச் செய்யும்போது, நாம் நன்றாக உணர்கிறோம். குறைந்த பட்சம், நாட்டுக்காக ஏதாவது நல்லது செய்கிறோம் என்ற நிம்மதி இருக்கிறது” எனப் பேசினார்.
இதனை தொடர்ந்து பேசிய சித்தராமையா, “அதிகாரமா? சிந்தாந்தமா? எதை தேர்ந்தெடுப்பது என்று கேட்டால், சிந்தாந்தம் தான் எப்போதும் முக்கியம். கட்சியின் சித்தாந்தத்தையும், கட்சியின் திட்டங்களையும் மக்கள் முன் வைக்க வேண்டும். மேலும் நீங்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களின் சாதனைகளையும், சிந்தாந்ததையும் மக்களுக்கு சொல்ல வேண்டும். அப்போதுதான் நம் நிலைப்பாட்டை மக்கள் பாராட்டுவார்கள், அவர்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள். அதிகாரம் வரும், போகும். ஆனால், சித்தாந்தத்திற்கு உண்மையாக இருப்பது பெரிய விஷயம். இதற்காக நமது தலைவர்கள் நிறையத் தியாகங்களைச் செய்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “கார்கே மற்றும் சித்தராமையா இருவரின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். எனது பார்வையில், சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் அதிகாரத்தை நோக்கி செல்ல முடியாது. ஏழைகள், பெண்கள் சார்பு, பன்மை, அனைவரையும் சமமாக நடத்தும் நமது சித்தாந்தத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். தேசிய அளவில் அரசியல் போராட்டம் எப்போதும் சித்தாந்தத்தைப் பற்றியது.
நான் வெள்ளை நிற சட்டை பயன்படுத்துவதற்கு வெளிப்படைத்தன்மையும், எளிமைதான் காரணம். மேலும் நான் ஆடைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. நான் அதை எளிமையாக்க விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த பிரச்சாரம் கிட்டத்தட்ட 70 நாட்களாக நடந்து வருகிறது. பாரத் ஜோடோ யாத்ரா ஒரு பிரச்சாரம் அல்ல. ஆனால், பிரச்சாரத்தை விட உழைப்பின் அடிப்படையில் யாத்ரா கடினமாக இருந்தது. இடைவிடாது, நான் நீண்ட நாட்களாக சென்று வருகிறேன். மக்களின் மனநிலை மூலம் நாட்டுக்கு என்ன தேவை என்று சிந்திக்க முடிந்தது” என்று கூறினார்.