ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே. ராம் என்பவர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான சட்டவிரோத பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் வீரேந்திர கே. ராம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஜார்க்கண்ட் மாநில ஊரக வளர்ச்சி அமைச்சர் ஆலம்கீர் ஆலமின் உதவியாளரின் வீட்டு வேலைக்காரர் சஞ்சீவ் லால் என்பவரிடம் இருந்து ரூ. 25 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அறை ஒன்றில் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பீகார் மாநில துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கூறுகையில், “அவர்கள் அனைவரும் கொள்ளையடிப்பவர்கள். லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஷிபு சோரன் குடும்பத்தினர் நாட்டை கொள்ளையடிக்கும் வேலையை செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக, அரசு வெளிப்படையாக நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.