இயக்குநர் அமீர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை ஆதம்பாவா இயக்கி தயாரித்தும் உள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், நக்கீரன் ஸ்டூடியோஸ் யூடிப் தளத்தில் படம் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அப்போது, பாலா மற்றும் சீமானிடம் இடைவெளி ஏற்பட்டது தொடர்பாக பேசிய அவர், “பாலாவுடைய இடைவெளி என்பது, அரசியல் ரீதியாக கருத்து முரண்களால் ஏற்பட்டது அல்ல. சினிமா எனும் மாயையால் ஏற்பட்டது. இங்கு, ஒரு இயக்குநர் இப்படித்தான் இருக்க வேண்டும், நடிகர் இப்படித்தான் இருப்பார் எனப் பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது எதுவுமே அவர்களுடைய ஒரிஜினல் கேரக்டர் கிடையாது. அது வேறு. வீட்டில் என்னவாக இருக்கிறார்களோ அதுதான் அவர்களுடைய ஒரிஜினல். பொதுவெளியில் அவர்கள் பெற்றிருக்கிற வெற்றியின் அடிப்படையில், அவர்களுடைய சம்பளத்தின் அடிப்படையில், வரவேற்பின் அடிப்படையில், வியாபாரத்தின் அடிப்படையில் வைத்து, கட்டமைக்கப்படுகிற பிம்பம், அதை ஏற்காமல்தான் நானும் பாலாவும் பிரிந்தோம்.
ஆனால் சீமானுடன் ஏற்பட்ட இடைவெளி, அரசியல் ரீதியான கருத்துக்கள். ஒரு வேளை நான் சொன்னது நாளைக்கு சரியாக இருக்கலாம். ஒரு வேளை அவர் சொன்னது கூட நிஜமாக இருக்கலாம். இதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும். பிரிந்தோமே தவிற உறவே இல்லாமல் இல்லை. பாலா இப்போதும், என்னுடைய வீட்டில் வந்து என் அண்ணனுடன் பேசிக்கொள்கிறார். நானும் அவருடைய குடும்பதினருடன் பேசுவேன். சினிமாவில் உறவில்லை. சீமானுடனும் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கேன். அண்ணன் தம்பி உறவுகளிலிருந்து நான் விலகவில்லை. அரசியல் எங்களைப் பிரித்து வைத்துள்ளது. எது சரி, தப்பு என்று காலம் தான் முடிவுசொல்லும்” என்றார்.