சேலம் மாவட்டம், அய்யன்பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். 47 வயதான இவர், காற்றாலைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சேலம் மாவட்டத்தில் பிரபல தொழில் அதிபராகவும் உள்ளார். இந்த நிலையில், நித்தியானந்தமிற்கு முகநூலில் 40 வயதான பானுமதி என்ற பெண் மெசேஜ் செய்துள்ளார். அவர், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் எனக் கூறியுள்ளார். அவரது, முகநூல் அழைப்பை ஏற்ற நித்தியானந்தம், தன்னையும் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி நட்பாக பேசி வந்துள்ளார்.
இத்தகைய சூழலில், கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி பானுமதி ஆசைவார்த்தை கூறி நித்தியானந்தத்தை தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்று பானுமதியின் வீட்டுக்கு நித்தியானந்தம் சென்றுள்ளார். இதையடுத்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள வீட்டில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த 4 பேர் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து நித்தியானந்தமிடம், 'எதற்காக இங்கு வந்தாய்? எங்க ஊர் பொண்ணுடன் என்ன தொடர்பு? என்று கூறி மிரட்டியுள்ளனர். அதற்கு பதில் ஏதும் சொல்லமுடியாமல், தொழில் அதிபர் நித்தியானந்தம் அதிர்ந்துபோய் நிற்க, அவரை வீட்டில் உள்ள அறையில் அந்தக் கும்பல் அடைத்து வைத்துள்ளது. மேலும், அவர் அணிந்து இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி, ஒரு பவுன் தங்க மோதிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு ஆகியவற்றையும் பறித்துள்ளனர்.
அப்போது, ''இதோடு விட்டுவிடுங்கள் நான் ஊருக்கு திரும்பிவிடுகிறேன்..'' என நித்தியானந்தம் கதறி அழுதுள்ளார். ஆனால், அத்துமீறி நுழைந்தவர்களைப் பார்த்து பதற்றம் அடையாத பானுமதி, அவர்களுடன் சேர்ந்து தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அப்போது தான் சேலம் தொழில் அதிபருக்கு தான் வலையில் சிக்கியது தெரியவந்துள்ளது. ஆனால், விடாமல் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்த அந்தக் கும்பல் நித்தியானந்தமின் செல்போன் வங்கி செயலி மூலமாக 75 ஆயிரம் மற்றம் ஏ.டி.எம். கார்டு மூலம் 60 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர்.
பின்னர், நித்தியானந்தத்தை காரில் கடத்தி சென்று, நெல்லையை அடுத்த பொன்னாக்குடி அருகில் உள்ள ஒரு இடத்தில் வைத்து, தங்களுக்கு பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். அதைக்கேட்டு பயந்துப்போனவர் தனது வங்கி காசோலையில் 10 லட்சத்தை கையெழுத்து போட்டுக்கொடுத்துள்ளார். அந்தப் பணத்தை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் எடுக்கச் சென்ற நேரத்தில், நடந்ததை நித்தியானந்தம் தன்னிடம் வேலை செய்யும் நபரிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். உடனே, அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க, தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர்.
இதையடுத்து, தொழிலதிபர் நித்தியானந்தத்தைக் கடத்தி நகை-பணம் பறித்த பானுமதி கைது செய்யப்பட்டார். மேலும், அவரின் கூட்டாளிகளான தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த பார்த்தசாரதி, வெள்ளத்துரை, ரஞ்சித், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த சுடலை ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, வலையில் சிக்கிய தொழில் அதிபர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
பானுமதி குடும்பத்தைப் பிரிந்து நெல்லையில் குடியேறி உள்ளார். அங்கு அவருக்கு பள்ளி நண்பர்கள் மூலம் கிடைத்த கூட்டாளிகள் மூலம் பேஸ்புக்கில் ஆசைவார்த்தைக் கூறி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். எப்போதும் பானுமதி தொழில் அதிபர்களை வலையில் வீழ்த்தி, வீட்டில் தனிமையில் இருக்கும்போது, அவரது கூட்டாளிகள் உள்ளே புகுந்து மிரட்டி பணம் பறித்து வந்ததுள்ளனர். இப்படி, 6 வருடங்களாக செய்து வந்துள்ளனர். இவர்களிடம் பல பிரபல தொழில் அதிபர்கள் பலர் ஏமாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போலீசார் மோசடி கும்பலைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதே, பாணியில் பணம் பறிக்கும் காட்சிகள் தமிழில் நடிகர் விமர் நடிப்பில் வெளிவந்த 'விலங்கு' வெப்சீரில் இடம்பெற்று இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.