புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் அதிக காளைகள் கலந்துகொண்டதையடுத்து உலக சாதனையாக அறிவிக்கப்பட்டது.
20 ந் தேதி விராலிமலை ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஆயிரம் காளைகளுக்கு மேல் கலந்து கொண்டன. இந்த ஆண்டு 2500 காளைகளுக்கு மேல் கலந்து கொள்ள செய்து சாதனையாக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் திட்டமிட்டுள்ளார் என்று கடந்த 13 ந் தேதி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அந்த பரபரப்பு தகவல்கள் தொலைக்காட்சிகள், நாளிதழ்களில் விளம்பரங்களாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு விளையாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்க மற்ற அமைச்சர்கள் அணிவகுத்து நின்று ரசித்தனர். காளைகள், காளையர்கள், பார்வையாளர்கள் என்று அனைவருக்கும் காப்பீடு செய்யப்பட்ட முதல் ஜல்லிக்கட்டு போட்டி விராலிமலை தான். 12 மணி வரை 500 காளைகள் விடப்பட்ட நிலையில் பார்வையாளர்களாக வந்திருந்த இருப்பூர் ராமு, ஜீயபுரம் சதீஷ் ஆகிய இருவரும் மாடுகள் முட்டி பலியானார்கள். சுமார் 47 பேர் காயமடைந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டிருந்தது.
விராலிமலை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்வதற்கு அதிகமான காளைகள் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து இதை உலக சாதனையாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன் அதனை மதிப்பிடுவதற்காக இங்கிலாந்தில் இருந்து மார்க், மெலினா ஆகியோர் கொண்ட குழுவினர் காலை முதல் கண்காணித்தது. மாலை வரை வரை 1,353 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.
இதே போல வேறு எந்த ஊரிலும் அதிகமான காளைகள் அவிழ்க்கப்படாததால் இதை உலக சாதனையாக அந்தக் குழு அறிவித்தது. இத்தகைய அறிவிப்பு வெளியானதும் ஜல்லிக்கட்டு திடலில் திரண்டிருந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த மேடையிலேயே சான்றிதழும் வழங்கப்பட்டது.
விராலிமலை ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கிய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அதே போல, சிறந்த காளையாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொந்த ஊரான ராப்பூசலைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரது காளையும் தேர்வு செய்யப்பட்டது. இருவரையும் பாராட்டி தலா ஒரு கார் வழங்கப்பட்டது. இவர்களுக்கு மக்களவை துணைத் சபாநாயகர் தம்பிதுரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.
சாதனைக்காக ஒரு ஜல்லிக்கட்டு நடத்தி முடித்துவிட்டார் அமைச்சர் விஜயபாஸ்கர்.