தஞ்சாவூரில் மும்முனை மின்சாரம் முழுமையாக வழங்கப்படாததால் நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் பாசன வசதி இன்றி தவித்து வருகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் நீர் தட்டுப்பாடு மேலும் அதிகரித்துள்ளது. சம்பா தாளடி சாகுபடிகள் மின்மோட்டாரை நம்பியே செய்யப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் அறுவடை பணிகள் முடிந்ததையடுத்து இந்த ஆண்டுக்கான குறுவை சாகுபடி தஞ்சை, திருவையாறு, திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம், அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்முனை மின்சாரம் முழுமையாக வழங்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பயிர்கள் நீரின்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் முழுமையாக வழங்கப்படாததற்கு அரசு முறையான விளக்கம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 'தமிழ்நாட்டில் 26 லட்சம் விவசாயம் இணைப்புகளுக்கு ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 700 மெகா வாட் அளவுக்கு விவசாய பயன்பாட்டிற்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. தற்பொழுது நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளில் 1.5 லட்சம் மின் இணைப்புகள் புதிதாக விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. வீடு, ஆலைகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படுவதால் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க முடியவில்லை. தற்பொழுது பீக் சீசன் என்பதால் காற்றாலை மின்சாரமும் கை கொடுக்காததால், முழுக்க முழுக்க சூரியன் மின்சாரமும் மத்திய தொகுப்பு உள்ளிட்ட வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவது போன்ற சூழலால் மின்சாரம் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும், வரக்கூடிய காலங்களில் மும்முனை மின்சாரம் முழுமையாக விவசாயிகளுக்கு கொடுக்கப்படும்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.