
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குள்ளஞ்சாவடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில், 'நம்மில் ஒருவர். நம் மண்வாசனையை வெளிப்படுத்தக் கூடியவர். இந்த பகுதியில் விளையும் மா, பலா, வாழை, முந்திரி, மல்லாக்கோட்டை உள்ளிட்டவைகளை நன்கு அறிந்தவர். இவரை எதிர்த்து போட்டியிடுபவர் நமக்கு சொந்தமும், இல்லை பந்தமும் இல்லை என பாட்டு பாடினார். சொந்தம் என ஏமாறக்கூடாது ஜாக்கிரதையாக இருங்கள்.
பணம் வரும் போகும் ஆனால் தங்கர்பச்சானிடம் தற்போது பணம் இல்லை கடனில் உள்ளார். அவரிடம் பணம் இருந்தால் 10 அழகி படத்தை எடுத்து இங்கேயே நடிகர், நடிகைகளை தேர்வு செய்து விடுவார். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் அறிவார்ந்தவர்கள் உள்ளார்கள். இதில் பெண்கள் அதிகமாக உள்ளனர். 19 வயதுக்கு கீழ் உள்ள பெண்களை தெய்வமாகும், அதற்கு மேல் உள்ள பெண்களை தேவதையாகவும் நாங்கள் பார்க்கிறோம். முந்திரி காடுகளில் இருந்து பெண்கள் படித்து ஐஏஎஸ் வெற்றி பெற்று வருகிறார்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. மோடியை உலகத் தலைவர்கள் பாராட்டுகிறார்கள். எனவே அனைவரும் மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். மண்ணை பொன்னாக்குவேன் என வாக்குறுதிகளை அளிப்பார்கள் ஏமாற வேண்டாம். தங்கர்பச்சான் மக்களின் பணிகளை தரமாக செய்யக்கூடிய நபர்'' என்று பேசினார்.