
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூரில் அமைந்துள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி, லாரி ஒன்று இன்று (26.02.2025) அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதே போன்று சென்னையில் இருந்து மதுரை நோக்கி 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து சென்றுகொண்டிருந்தன. இத்தகைய சூழலில் தான் முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் பிடித்ததால், அதன் பின்னால் ஒன்றன்பின் ஒன்றாக வந்த 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 45 பயணிகள் வேப்பூர் மற்றும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் வேப்பூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது 4 ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதே சமயம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து திருப்பூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன்படி இந்த பேருந்து கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இதற்கு எதிர்த் திசையில் திருச்சியை நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. அப்போது பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.