
மகாகவி பாராதியாரின் 140வது பிறந்தநாள் இன்று (11.12.2021) கொண்டாடப்படுகிறது. இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், “எட்டயபுரத்தில் பிறந்து எட்ட முடியாத உயரங்களைத் தொட்ட பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் இன்று. தேச விடுதலை, பெண் விடுதலை, கல்வி, விளையாட்டு என அத்தனை குறித்தும் தொலைநோக்கு கொண்டிருந்த மாமனிதன். அவனது பிறந்தநாளில் நினைவு கூறுவது நமக்கு பெருமை! பாரதியார் மறைந்து நூறாண்டு ஆனாலும் அவனது கவிதை நெருப்பும், கருத்து நெருப்பும் இன்றும் கனன்று கொண்டே தான் இருக்கின்றன. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க அவனது எழுத்துகளைத் தான் கடன் வாங்க வேண்டியுள்ளது. வெல்க பாரதியார்.... நனவாகட்டும் அவனது கனவுகள்” என்று தெரிவித்துள்ளார்.